.webp)
-486946.jpg)
Colombo (News 1st) கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது நேற்று (07) நடத்தப்பட்ட கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் 04 சந்தர்ப்பங்களில் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தினால் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பகல் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டமை மற்றும் பல்கலைக்கழகத்திற்குள் நடத்தப்பட்ட தாக்குதல் என்பவற்றை கண்டித்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதில் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்துகொண்டதுடன், பின்னர் கலைப்பீடத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான எதிர்ப்பு பேரணி கொழும்பு ரோயல் கல்லூரி நோக்கி பயணித்தது.
தேசிய அருங்காட்சியகம் நோக்கி செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் பேரணியை கலைப்பதற்கு பொலிஸ் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பொலிஸாருடன் கலந்துரையாடி முன்நோக்கிச் செல்ல மாணவர்கள் முயற்சித்தனர்.
மீண்டும் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைக்கு முகங்கொடுத்த மாணவர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களும் கேம்பிரிட்ஜ் பிளேஸை சுற்றியுள்ள தனியார் வீதிகளை நோக்கி ஓடினர்.
இதன்போது, வீதியில் பயணித்த பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தினால் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
இந்நிலையில் சிறிது நேரத்தின் பின்னர் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்ற பகுதிக்கு இராணுவத்தினர் அழைக்கப்பட்டனர்.
எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பிரதான மார்க்கங்கள் முழுமையாக தடைப்பட்டதால், அனைத்து வாகனங்களும் உள்வீதிகள் ஊடாக பயணித்தன.
எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், கொழும்பு ரோயல் கல்லூரிக்கு அருகில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில், பொலிஸாரால் மீண்டும் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திற்கு அருகில் ஒன்றுகூடிய மாணவர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.
