.webp)
Colombo (News 1st) இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பான வேலைத்திட்டம் மார்ச் மாதம் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக்கு சமர்ப்பிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சீனா, இந்தியா உள்ளிட்ட அனைத்து முக்கிய கடன் வழங்குநர்களிடமிருந்தும் பாரிஸ் கிளப்பிடம் ( Paris Club) இருந்தும் தீர்மானமிக்க கொள்கை செயற்பாடுகளையும், நிதி உறுதிப்பாடுகளையும் பெற்றுக்கொள்வதில் இலங்கை அதிகாரிகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை தான் பாராட்டுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்ட பின்னர் ஏனைய தரப்பினரும் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
நிறைவேற்றுக் குழுவின் அனுமதியானது உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட ஏனைய கடன் வழங்குநர்களிடமிருந்து நிதியுதவியை ஊக்குவிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டு மக்கள் செய்த அர்ப்பணிப்பு காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து சாதகமான பதிலை பெற்றுக்கொள்ள முடிந்ததாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
''வரிக் கொள்கை, எரிபொருள், எரிவாயு, மின்சாரம் ஆகிய விடயங்களில் இலங்கை மக்கள் பாரிய அர்ப்பணிப்பை செய்ய நேரிட்டது. அத்தியாவசிய இறக்குமதி பொருட்களின் விலைகள், சீமெந்து, இரும்பு, மருந்து வகைகளின் விலைகள் குறைவடைவதற்கான வாய்ப்பு ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதன் மூலம் ஏற்படும். இதன் மூலம் டொலருக்காக செலுத்த வேண்டிய ரூபா குறைவடையும். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, உள்ளிட்ட ஏனைய இரு தரப்பு கடன் வழங்கும் நிறுவனங்கள் நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களுக்கான நிதியை வழங்கினால் இந்த வருடத்திற்குள் மேலதிகமாக சுமார் 5 பில்லியன் டொலர் நாட்டிற்கு கிடைக்கும் என்பதனை ஜனாதிபதி அமைச்சரவையில் அறிவித்தார்,''
என பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.