இலங்கை - இந்திய மக்களின் பங்களிப்புடன் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இனிதே நிறைவு

by Staff Writer 04-03-2023 | 7:50 PM

Colombo (News 1st) கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்றைய தினம் இனிதே நிறைவுபெற்றது.

இலங்கை - இந்திய மக்களுக்கு இடையிலான உறவுப் பாலமாக போற்றப்படும் கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்  திருவிழாவில் பங்கேற்பதற்காக இரு நாடுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் கச்சத்தீவில் கூடினர்.

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா நேற்று பிற்பகல் 4 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வு இலங்கை - இந்திய பங்கு தந்தையர்களின் தலைமையில் இடம்பெற்றது. அதனைத்  தொடர்ந்து சிலுவைப் பாதையும்   திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது. 

திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று காலை 6 மணிக்கு திருச்செபமாலை இடம்பெற்று, 6.30 மணிக்கு  ஆயர் மற்றும் அருட்தந்தையர்கள் வரவேற்கப்பட்டு, 7 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதில் இருநாட்டு பக்தர்களும் மிகவும் பக்தியுடன் கலந்து இறை ஆசீரைப் பெற்றுக்கொண்டனர். 

அதனைத் தொடர்ந்து புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனியும் இடம்பெற்று திருச்சொரூப ஆசிர்வாதமும் நடைபெற்றது. 

இன்றைய திருவிழா திருப்பலி கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை மற்றும் யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.

இவ்வருடம் கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழாவில் 2800 இலங்கை பக்தர்களும், 2100 இந்திய பக்கர்களும் கலந்துகொண்டிருந்தனர். 

போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் கடற்படையினரால்  மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த வருட திருவிழாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவானவர்களே அனுமதிக்கப்பட்டிருந்தால், இவ்வருட திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.