.webp)
Antarctica: அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக கோடையில் உருகி வருவது செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
காலநிலை மாற்றத்தின் பாதிப்பு உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. அதிகரித்து வரும் புவி வெப்பநிலை உயர்வு காரணமாக துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் முன்பைக் காட்டிலும் வேகமாக உருகி வருகின்றன.
இந்த அதீத காலநிலை மாற்றத்தால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இயற்கை பேரிடர்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் முந்தைய கோடை காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது வேகமாக உருகி வருவதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2014 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், முந்தைய கோடை காலங்களைக் காட்டிலும் 22% வேகமாக பனிப்பாறைகள் உருகி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு பனிப்பாறைகள் வேகமாக உருகுவது கடல்நீர் மட்ட உயர்விற்கு வித்திடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பனிப்பாறைகள் உருகுவதால் கடந்த 1992 முதல் 2017 வரையிலான காலப்பகுதியில் மட்டும் 7.6 மில்லிமீட்டர் அளவில் கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.