இந்திய மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை -S.ஜெய்சங்கர்

இந்திய மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

by Chandrasekaram Chandravadani 02-03-2023 | 12:57 PM

Colombo (News 1st) இந்திய மீனவர்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி S.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் குப்புசாமி அண்ணாமலைக்கு இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பாஜக தலைவர் குப்புசாமி அண்ணாமலை அண்மையில் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் நால்வர் காயமடைந்ததாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த விவகாரம் தொடர்பில், உயர்ஸ்தானிகராலயத்தினூடாக இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டதாக இந்திய வௌிவிவகார அமைச்சரின் பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தாக்குதல் தொடர்பான விபரங்களை இலங்கை அரசாங்கத்திடம், இந்திய உயர்ஸ்தானிகராலயம் கோரியுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி Sஸ்.ஜெய்சங்கர் தமது பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் எவ்வித தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை எனவும் அது முற்றுமுழுதான பொய் குற்றச்சாட்டு எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய நேற்று(01) தெரிவித்திருந்தார்.