ரூபாவின் பெறுமதி மீண்டும் ஸ்திரமடையும் அறிகுறி; மண்ணெண்ணெய் விலையிலும் வீழ்ச்சி

by Bella Dalima 01-03-2023 | 9:20 PM

Colombo (News 1st) அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருகின்றது.

இன்று (01) அரசாங்கத்தின் முக்கிய வங்கிகளில் ஒரு டொலரின் கொள்வனவு விலை 353 ரூபாவாக அமைந்ததுடன், அதன் விற்பனை விலை 363 ரூபா 30 சதமாக காணப்பட்டது.

இதேவேளை, ஒருசில தனியார் வணிக வங்கிகளில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 360 ரூபாவாக பதிவானது.

மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மூன்று தனியார் வங்கிகளுக்கு 400 மில்லியன் டொலர் நாணய பரிமாற்ற வசதியை வழங்குவதற்கு உலக வங்கியின் சர்வதேச நிதி ஒத்துழைப்பு அமைப்பு தீர்மானித்தது.

இந்த நாணய பரிமாற்ற வசதி ரூபாவின் பெறுமதி ஓரளவு ஸ்திரமடைவதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலையை குறைப்பதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மண்ணெண்ணெய் விலையை குறைப்பதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய, 355 ரூபாவாக இருந்த ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யின் புதிய விலை 305 ரூபாவாகும்.  இலங்கை தொழில்நுட்ப மண்ணெண்ணெய் விலையும் 134 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. 464 ரூபாவாகக் காணப்பட்ட தொழில்நுட்ப மண்ணெண்ணெய் விலை 330 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.