விவசாயிகளுக்கு டீசல் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது

சீன அரசு நன்கொடையாக வழங்கிய 6.98 மில்லியன் லிட்டர் டீசல் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது

by Staff Writer 01-03-2023 | 5:36 PM

Colombo (News 1st) சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய டீசலை விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். 

விவசாய அபிவிருத்தி திணைக்களத்துடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். 

நாட்டின் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 6.98 மில்லியன் லிட்டர் டீசலை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது. 

இந்த டீசல் இம்முறை பெரும்போகத்தில் அரை ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கர் வரை நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.  இதற்கமைய, ஒரு ஹெக்டேருக்கு 15 லிட்டர் டீசல் வழங்கப்படவுள்ளது. 

இதனை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை எதிர்வரும் வாரம் முதல் ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளார். 

இதற்கான டோக்கன்களை அனைத்து விவசாய சேவை மத்திய நிலையங்களிலும் விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டோக்கன்களுக்கான எரிபொருளை, குறிப்பிடப்பட்டுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக விவசாயிகளுக்கு வழங்க தேவையான நடவடிக்கைகளை  இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமானால், உடனடியாக மாவட்ட செயலாளரிடம் அல்லது உதவி விவசாய அபிவிருத்தி ஆணையாளரிடம் முறையிடுமாறு விவசாய அபிவிருத்தி திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

இதேவேளை, இம்முறை சிறுபோகத்தில் 12 இலட்சம் விவசாயிகளுக்கு PSP உரத்தை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

2022 பெரும்போகத்தில் 7,80,000 ஹெக்டேரில் நெற்செய்கையை மேற்கொண்ட 12 இலட்சம் விவசாயிகளுக்கே இவ்வாறு PSP உரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. 

அத்துடன், பண்டி உரம் 50 கிலோகிராம் பொதியொன்றின் விலையை 19,500 ரூபாவில் இருந்து 10 ஆயிரம் ரூபாவாகக் குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 

36,000 மெட்ரிக் தொன் PSP உரம் அடங்கிய கப்பல் எகிப்தில் இருந்து எதிர்வரும் 20 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது.