ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை: தடை உத்தரவு

கொழும்பு வைத்தியசாலை சுற்றுவட்ட வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்துதை இடைநிறுத்தி தடை உத்தரவு

by Staff Writer 26-02-2023 | 2:29 PM

Colombo (News 1st) கொழும்பு பிரதான வைத்தியசாலை சுற்றுவட்ட வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதை இடைநிறுத்தி, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட சிலருக்கு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருதானை பிரதான வைத்தியசாலை சுற்றுவட்டத்திற்கு அருகாமையில், கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண் வைத்தியசாலை, இருதய வைத்தியசாலை ஆகியன அமைந்துள்ள காரணத்தினால் குறித்த போராட்டங்களால் நோயாளர்களும் அப்பிரதேசங்களைப் பயன்படுத்தும் மக்களும் பாதிக்கப்படலாம் என மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பிரகாரம், வைத்தியசாலை சுற்றுவட்டம் மற்றும் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் லிப்டன் சுற்றுவட்டத்திலிருந்து டீன்ஸ் வீதி, சிம்மன்ஸ் வீதி சந்தி வரையிலான வீதி மற்றும் நடைபாதைகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுர குமார திஸாநாயக்க, டில்வின் சில்வா, விஜித ஹேரத், நலிந்த ஜயதிஸ்ஸ, பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி உள்ளிட்ட 26 பேருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.