.webp)
Colombo (News 1st) உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளியினரான அஜய் பங்கா (Ajay Banga)நியமிக்கப்படுவதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நேற்று (23) அறிவித்துள்ளார்.
Mastercard நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான அஜய் பங்கா, பண பாவனைக்கு எதிரானவர் எனவும் முழுக்க முழுக்க எண்ம (டிஜிட்டல்) பணப்பரிவர்த்தனைகளுக்கு உலகம் மாற வேண்டும் என நினைப்பவர் எனவும் கூறப்பட்டுள்ளது.
வழக்கமான பொருளாதார நடவடிக்கையிலிருந்து வெளியேறி, பண புழக்கத்தில் இருந்து மக்கள் முழுமையாக விடுபட வேண்டும் என அஜய் பங்கா விரும்புகிறார்.
அவரது புதிய பொறுப்புடன், உலகம் முழுவதும் தலைவிரித்தாடும் வறுமையை ஒழிக்க நிதி ஒதுக்குவதற்கும் உலகம் எதிர்கொண்டுள்ள காலநிலை மாற்றம் மற்றும் மக்களின் மருத்துவ வசதியை மேம்படுத்துவதற்கும் அவர் முக்கியத்துவம் கொடுப்பார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
வரலாறு காணாத தற்போதைய பொருளாதார நெருக்கடி சூழலில் உலக வங்கியை அஜய் பங்கா திறன்பட வழிநடத்துவாா் என்றும் பைடன் நம்புகிறார்.
சுமாா் 30 ஆண்டுகளாக சா்வதேச நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வேலைவாய்ப்பு, முதலீடுகளை ஈா்த்து மாற்றத்தை ஏற்படுத்தியவா் அஜய் பங்கா என பைடன் பாராட்டியுள்ளார்.
அஜய் பங்காவின் நியமனத்தை உலக வங்கியின் இயக்குநா்கள் உறுதி செய்யும் பட்சத்தில், உலக வங்கிக்குத் தலைமை பொறுப்பை ஏற்கும் முதல் இந்திய வம்சாவளி சீக்கியா் என்ற பெருமையை அஜய் பங்கா பெறுவாா்.
இந்திய இராணுவ வீரரின் மகனான அஜய் பங்கா, தனது குழந்தைப் பருவத்தை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கழித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.
63 வயதாகும் அஜய் பங்கா தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிதி நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளாா். அதற்கு முன் Mastercard நிறுவனத்தின் தலைவராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் பதவி வகித்துள்ளாா். 2016-இல் பத்மஸ்ரீ விருதையும் அஜய் பங்கா பெற்றுள்ளாா்.
இந்தியாவில் பிறந்த அஜய் பங்கா தொழில்நுட்பம், தரவு, நிதி சேவைகளில் சா்வதேச தலைவராக உயா்ந்துள்ளாா் என்றும் வளா்ச்சி அடையும் நாடுகளை மேம்படுத்துவதில் நீண்ட அனுபவம் உள்ள அவா், பொதுத்துறை, தனியாா் பங்களிப்புடன் நிதி ஒருங்கிணைப்பை மேற்கொள்வாா் என்றும் அமெரிக்க அதிபா் மாளிகை தெரிவித்துள்ளது.
Nestle நிறுவனத்தில் தனது முதல் பணியை தொடங்கிய பங்கா, PepsiCo நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.