.webp)

Colombo (News 1st) நிதி நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) அனைத்து செயற்றிட்டங்களையும் மீள ஆரம்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அந்நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் நாயகம் Teruyuki Ito-வை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நிறைவு பெற்றதன் பின்னர், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் செயற்றிட்டங்களை விரைவாக ஆரம்பிக்கவுள்ளதாக Teruyuki Ito இதன்போது உறுதியளித்துள்ளார்.
நிதி நெருக்கடி காரணமாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 12 செயற்றிட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு நகரங்களிலும் செயற்படுத்தப்படும் நீர் சுத்திகரிப்பு, கழிவுநீர் அகற்றல், சுகாதார பாதுகாப்பு மற்றும் திண்மக்கழிவு அகற்றல் ஆகிய செயற்றிட்டங்களுக்காக பல தசாப்தங்களாக இலங்கைக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் நாயகத்திற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் ரயில் பாதைகள் உள்ளிட்ட பொது போக்குவரத்தை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட புதிய துறைகளுக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்பை வழங்குமாறும் பிரதமர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
