.webp)

Colombo (News 1st) உள்ளூராட்சி மன்ற தேர்தல் தாமதப்படுத்தப்படுவது தொடர்பில் தௌிவுபடுத்தி நாட்டிலுள்ள அனைத்து தூதரகங்களுக்கும் சுதந்திர மக்கள் கூட்டணி கடிதம் அனுப்பியுள்ளது.
இலங்கையில் எந்தவொரு தேர்தலை நடத்துவதற்குமான உரிய காலப்பகுதி, அரசியலமைப்பு ,ஏனைய சட்டங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவற்றை கடைப்பிடிப்பது கட்டாயமானது என்பதுடன், அவற்றின் உள்ளடக்கத்தை மாற்றுவதற்கோ அல்லது தமது விருப்பத்திற்கு ஏற்ப செயற்படுவதற்கோ எவருக்கும் இயலுமை கிடையாது எனவும் சுதந்திர மக்கள் கூட்டணி கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
வரலாற்றில் முதற்தடவையாக நாட்டில் நிதியில்லை எனும் காரணத்தைக் கூறி தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாகவும் இந்த தீர்மானத்தின் பெறுபேறுகள் எதிர்காலத்தில் தெரியவரும் எனவும் சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தங்களின் நாடுகளை தௌிவுபடுத்தி, இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுதந்திர மக்கள் கூட்டணி , வௌிநாட்டு தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரியுள்ளது.
திலங்க சுமதிபால, பேராசிரியர் G.L.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, தயாசிறி ஜயசேகர, அநுரபிரியதர்சன யாப்பா, கலாநிதி நாலக்க கொடஹேவா, அசங்க நவரத்ன, கலாநிதி ஜீ.வீரசிங்க ஆகியோர் குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
