முதலுதவி கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயம்

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்போர் முதலுதவி கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயம்

by Bella Dalima 21-02-2023 | 5:26 PM

Colombo (News 1st) சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக புதிதாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் முதலுதவி தொடர்பான அடிப்படை தௌிவூட்டலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக புதிதாக விண்ணப்பிக்கும் அனைவரும் தமது திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படும் முதலுதவி கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க கூறினார். 

வாகன விபத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் சந்தர்ப்பத்தில் அடிப்படை முதலுதவி பற்றிய அறிவு இன்மையின் காரணமாக அனர்த்தத்தின் பாதிப்பு அதிகமாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆகவே, சாரதிகளுக்கு அடிப்படை முதலுதவி பற்றிய அறிவை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன  போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க  குறிப்பிட்டார்.