காலத்தால் அழியாத தமிழ் எனும் வளர்மொழி...

காலத்தால் அழியாத தமிழ் எனும் வளர்மொழி...

by Chandrasekaram Chandravadani 21-02-2023 | 9:40 AM

Colombo (News 1st) சிந்தனை எனும் சிற்பத்தைச் செதுக்க தாய்மொழி எனும் உளியால் மட்டுமே முடியும். மொழியின்றி சிந்தனை கிடையாது. சிந்தனையற்ற மனித குலம் நாகரிகம் கண்டிருக்காது. ஒருவர் மற்றவருடனான தொடர்பை ஏற்படுத்தவென உருவான மொழிகள் பின்னாளில் இனத்தின் அடையாளமாகின. 

உலகில் 6500 மொழிகள் இருப்பதாகப் பலர் நம்பினாலும், உண்மையில் 7106 மொழிகள் புழக்கத்தில் இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. எவ்வாறாயினும், மொழிகளின் எண்ணிக்கையைத் திட்டவட்டமாகக் கூறுவது அரிது.

ஒரிரு தலைமுறைகளில் அழிவைச் சந்திக்கவுள்ள மொழிகளும் உள்ளன. ஏற்கனவே வழக்கொழிந்த மொழிகளும் உள்ளன. பேச்சு வழக்கில் மாத்திரமுள்ள மொழிகளும் உள்ளன.   தலைமுறை தாண்டி வாழும் மொழிகள் மக்களின் வாழ்வியலோடு கலந்து, அனுபவங்களினூடே வார்தைகளை உருவாக்கி, இலக்கணங்களால் நேர்த்தி கண்டு, இலக்கியங்களால் செழுமையுற்ற மொழிகள் தலைமுறைகளால் கடத்தப்பட்டு, காலத்தால் நிலைத்து நிற்கின்றன.

இங்கே தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுகளும் இல்லை, புறக்கணித்து வளர்ந்த நாடுகளும் இல்லை. சிந்தனையோட்டம் செழுமையுற தாய்மொழிக் கல்வியே சிறந்ததென ஆய்வுகள் பலவும் எடுத்தியம்புகின்றன. 

இன்று உலக தாய்மொழி தினம்

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பினால் (UNESCO) பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி உலக தாய்மொழி தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததை அடுத்து, கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வாழ்ந்து வந்த போதிலும் உருது மொழியே தேசிய மொழியாகக் காணப்பட்டது.

கிழக்கு பாகிஸ்தான் தற்போது வங்க தேசம் என அழைக்கப்படுகின்றது.

கிழக்கு பாகிஸ்தானில் உருது மொழி திணிக்கப்படுவதை ஏற்காத மக்கள், வங்க மொழியே தேசிய மொழியாக வேண்டுமென கோரி 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி 'வங்க மொழி இயக்கம்' உருவாக்கப்பட்டது. 

பல போராட்டங்களின் பின்னர் 1956ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானின் தேசிய மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது உயிரிழந்த வங்க மொழி இயக்க மாணவர்கள் நால்வரின் நினைவாக வருடந்தோறும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வங்க தேச அறிஞர் ஒருவர் UNESCO-வில் முன்மொழிந்தார்.

இதனையடுத்து, தாய்மொழிக்காக உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பெப்ரவரி மாதம் 21ஆம் திகதியை உலக தாய்மொழிகள் தினமாக UNESCO 1999ஆம் ஆண்டு அறிவித்தது.

2000 ஆம் ஆண்டிலிருந்து உலக தாய்மொழிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

ஒரு இனத்தின் அடையாளமாக மொழியே திகழ்கின்றது. ஒரு மொழி அழிந்துவிடுமாயின் அந்த இனத்தின் அடையாளம், கலாசாரம், பாரம்பரியம் என அனைத்துமே இல்லாதொழிந்து விடும். 

கருவிலிருந்தே தாய்மொழியை கேட்டு வளரும் ஒரு குழந்தை முதலில் அறியும் ருசி தாய்ப்பால் போன்று முதலில் அறியும் மொழி தாய்மொழி என்கிறார் கவிஞர் அறிவுமதி.

அது உணர்வோடு கலந்தது, பிரிக்க முடியாதது, பிரிக்கவும் கூடாதது. அன்போ, அதிகாரமோ அது எதுவாக இருந்தாலும் அதனை தாய்மொழியில் பகிரும் போதே அதன் சுவாரஷ்யமும் புரிந்துணர்வும் குறையாமல் கிடைக்கும். 

ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்புத்தன்மை காணப்படுகின்றது. 

''யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்'' என்கிறது பாரதியார் பாட்டு. 

உறவுகளை இணைக்கும் பாலமே மொழி. ஆம் இரண்டாயிரம் ஆண்டுகள் மரபுடைய தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் இருக்கிறது என்றார் ஈழத்து தமிழறிஞர் கா.சிவத்தம்பி. 

தமிழ்மொழிக்கு இருக்கின்ற மரபு கிரேக்க மொழி போன்ற ஒரு சில மொழிகளுக்கு மாத்திரமே உண்டு. இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட திருக்குறளை நாம் இன்றும் பயில்கின்றோம். ஆனால், தொன்மையான கிரேக்க மொழி இலக்கியத்தை இன்றைக்கு எளிதில் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடிவதில்லையாம்.

 காலத்தால் மாற்றங்களுக்குள்ளாகி, புதியனவற்றோடு தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழியே யுகங்கள் கடந்தும் வாழும்.  

தமிழெனும் வளர்மொழி தாய் மொழி வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமில்லை; தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்பட வேண்டிய மொழியென்றான் எம் முப்பாட்டன் பாரதி.

நண்பர்களுக்காவும் புரிதலுக்காகவும் வணிகத்திற்காகவும் நாம் எத்தனை மொழிகளைக் கற்றாலும், நமது அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் தொலைக்காமல் இருக்க, தமிழில் கற்று, அடுத்த சந்ததிக்கு கடத்தி, அதனைக் காலத்தால் அழியாமல் காப்பது எம் தலையாய கடமையாகும்.

செறிவான கலாசாரக் கூறுகளைக் கொண்ட உலகின் ஆறு மொழிகளில் எம் தாய்மொழி தமிழுக்கும் இடமுண்டு.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழி, இன்று காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு இளமையுடன் திகழ்கிறது.. 

தமிழ் வாழப் பணியாற்று; தமிழல்லவா உனை இயக்கும் உயிர்க்காற்று!