.webp)
Colombo (News 1st) உள்ளூராட்சி மன்ற தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்தி உத்தரவிடுமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் W.M.R.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு இன்று(20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அதனை ஒத்திவைத்து நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான S.துரைராஜா, ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறாது என்பதால் குறித்த தினத்திலேயே விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத காரணத்தினால் மனுவை திட்டமிட்டவாறு எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.