வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதில் தாமதம் ஏன்?

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதில் தாமதம் ஏன்: அரச அச்சகர் விளக்கம்

by Bella Dalima 18-02-2023 | 5:17 PM

Colombo (News 1st) போதுமான பொலிஸ் பாதுகாப்பு கிடைக்கப்பெறாமை மற்றும் சுற்றறிக்கை கட்டுப்பாடுகளினாலேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் தாமதமாகியுள்ளதாக அரச அச்சகர் தெரிவித்துள்ளார். 

இதற்காக வேறு எந்த தரப்பினரும் அழுத்தம் விடுக்கவில்லை என அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே அறிக்கை ஒன்றினூடாக தெளிவுபடுத்தியுள்ளார். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 18 மில்லியன் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட வேண்டியுள்ளன. இவற்றில் 3 வீதம் மாத்திரமே தபால் மூல வாக்குச்சீட்டுகளாகும். 

வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என உறுதி செய்து, தேர்தல் அச்சுப் பணிகளுக்காக 50 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட வேண்டுமென அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே வலியுறுத்தியுள்ளார். 

பாதுகாப்பு, நலன்புரி, மின்சாரம் உள்ளிட்ட சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த நிதி தேவைப்படுவதுடன், பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்படுமானால் 5 நாட்களுக்குள் தபால் வாக்குச்சீட்டுகளை அச்சிட முடியும் என அவர் கூறியுள்ளார். 

வாக்குச்சீட்டுகளை முழுமையாக அச்சிட்டு முடிப்பதற்கு 20 தொடக்கம் 25 நாட்கள் வரை தேவைப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். 

தமது திணைக்களத்தின் பாதுகாப்பிற்காக இதுவரை இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதுவரை நடைபெற்ற எந்தவொரு தேர்தலுக்கும் பொலிஸ் பாதுகாப்பு இன்றி வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படவில்லை எனவும் அரச அச்சகர் சுட்டிக்காட்டியுள்ளார்.