ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலோசனை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மானியம் வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Chandrasekaram Chandravadani 16-02-2023 | 11:43 AM

Colombo (News 1st) இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட புதிய மின் கட்டணத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதால் சிரமங்களை எதிர்கொள்ளும் தரப்பினருக்கு மானியம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மின்சக்தி - எரிசக்தி அமைச்சர் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு இன்று(16) ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய, மின்சாரத்தை தடையின்றி தொடர்ச்சியாக விநியோகிப்பதுடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மானியம் வழங்குதல், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சூரிய ஔி மின்கலங்களை வழங்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இன்று(16) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி - எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்று(15) முதல் அமுலாகும் வகையில் 66 வீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

புதிய மின் கட்டண திருத்தங்களுக்கு அமைவாக 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கான மின் கட்டணம் 276 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கு இதுவரை அறவிடப்பட்ட 680 ரூபா மின் கட்டணம், 2560 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

30 அலகுகள் பயன்பாட்டை கொண்ட வீடொன்றிற்கு இதுவரை காணப்பட்ட 360 ரூபா மின் கட்டணம், 1300 ரூபா வரை அதிகரிக்கப்படும்.

இது 261 வீத அதிகரிப்பாகும்.

90 அலகு பயன்பாட்டிற்காக இதுவரை அறவிடப்பட்ட 1800 ரூபா மின் கட்டணம், புதிய திருத்தத்திற்கு அமைவாக 4430 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

200 அலகுகளுக்கும் மேற்பட்ட மின்சார பாவனையை கொண்ட வீடுகளுக்காக மின் கட்டணம் 32 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.