பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு மரண தண்டனை

கொலை வழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு மரண தண்டனை

by Bella Dalima 15-02-2023 | 6:34 PM

Colombo (News 1st) பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்று (14) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

2005 ஆம் ஆண்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமையுடன் தொடர்புடைய வழக்கில், ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் ஹூங்கம பொலிஸ் குற்றப்பிரிவு நிலைய பொறுப்பதிகாரி, ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸில் அரச புலனாய்வு சேவைக்காக பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், மற்றும் திஸ்ஸமஹராம பொலிஸில் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஒருவர் ஆகியோருக்கே மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

குற்றவாளிகள் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி திஸ்ஸமஹாராம - தெபரவெவ, மாத்தறவத்தயில் மூன்று திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கைது நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, இரவு 12 மணியளவில் சந்தேகநபரின் வீட்டை சுற்றிவளைத்து, அவரைக் கைது செய்து, பின்னர் அவரை தப்பிச்செல்லுமாறு கூறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதை விசாரணைகளில் தெரியவந்திருந்தது. 

இந்த துப்பாக்கிச்சூட்டில் தெபரவெவ - மாத்தறவத்தையை சேர்ந்த லொக்கு ஹென்னதிகே அமில மகேஷ் என்பவரே உயிரிழந்திருந்தார். 

இலங்கை வரலாற்றில் நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒரே தடவையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.