பயணிகள் படகு சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்

13 ஆம் திருத்தம் தொடர்பில் நல்ல செய்தியை எதிர்பார்ப்பதாக குப்புசாமி அண்ணாமலை தெரிவிப்பு

by Bella Dalima 14-02-2023 | 7:20 PM

Colombo (News 1st) இலங்கையில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல நல்ல செய்திகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் குப்புசாமி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 13 ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதியை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய பிரதமரின் தனிப்பட்ட ஆர்வத்துடன் கூடிய பொறுப்பான திட்டமிடலால் மட்டுமே, இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டங்கள் காரணமாக  பிராந்தியத்தில் வலுவாக நிலவியிருந்த சீன ஆதிக்கம் வெகுவாக அடங்கிப்போயுள்ளதாகவும் குப்புசாமி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடி அனைத்தையும்  சீராக்கி, நல்லிணக்கத்தை உருவாக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு அமைதி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கும் காங்கேசன்துறையில் இருந்து காரைக்காலுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் மேலும் கூறியுள்ளார்.