.webp)
Equatorial Guinea: மத்திய ஆப்பிரிக்க நாடான ஈக்வடோரியல் கினியாவில் மார்பர்க் ( Marburg) என்னும் புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மார்பர்க் வைரஸ் தொற்றுக்கு 9 பேர் உயிரிழந்திருப்பதை ஈக்வடோரியல் கினியா உறுதிப்படுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது.
ஈக்வடோரியல் கினியாவின் Kie-Ntem மாகாணத்தில் அறியப்படாத இரத்தக்கசிவு காய்ச்சல் சிலருக்கு பரவியது கண்டறியப்பட்டதும், 200-க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த தொற்று காரணமாக அண்டை நாடான கெமரூனும் எல்லைப்பகுதியில் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியது.
இந்நிலையில், 9 இறப்புகளுக்கு மேலதிகமாக, ஈக்வடோரியல் கினியாவில் காய்ச்சல், சோர்வு, இரத்தம் கலந்த வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகளுடன் மார்பர்க் வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் 16 பேர் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
எபோலா, COVID - 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது.
வெளவால்களிலிருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88% இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது.
இதற்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அல்லது வைரஸ் தடுப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை.
Kie-Ntem மாகாணத்தின் Nsok-Nsomo மாவட்டத்தில் நடந்த இறுதிச்சடங்குகளுடன் இந்த தொற்றும் மரணங்களும் தொடர்புபட்டுள்ளதாக ஈக்வடோரியல் கினியாவின் சுகாதார அமைச்சர் Mitoha Ondo'o Ayekaba தெரிவித்துள்ளார்.
முன்னதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் பெப்ரவரி 7 ஆம் திகதி அறியப்படாத நோய்த்தொற்று குறித்து முறையிட்டிருந்தனர். அவர்கள் செனகலில் உள்ள ஆய்வகத்திற்கு தொற்று மாதிரிகளை அனுப்பி வைத்திருந்தனர். அந்த மாதிரிகளை பரிசோதித்த போது, மார்பர்க் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.