அடிலெய்டில் பாலி செயல்முறை அமைச்சர்கள் மாநாடு

ஆட்கடத்தல் தொடர்பான பாலி செயன்முறை திட்டத்துடன் இணைந்து செயலாற்றும் கெப்பிட்டல் மகாராஜா குழுமம்

by Bella Dalima 11-02-2023 | 5:30 PM

Colombo (News 1st) ஆட்கடத்தல் தொடர்பிலான குற்றங்கள் பற்றிய   8 ஆவது பாலி செயல்முறை அமைச்சர்கள் மாநாடு (Bali Process Eighth Ministerial Conference) அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் இடம்பெற்றது.

நவீன கால அடிமைத்தனத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான இந்த அமைச்சர்களின் அமர்வில், பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகள், வர்த்தக நிறுவனங்களின் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

இந்த அமர்விற்கு அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்  Penny Wong, இந்தோனேஷிய வௌியுறவுத்துறை அமைச்சர் Retno Marsudi ஆகியோர் இணை தலைமை தாங்கினர். 

அமைச்சர்களின் இந்த மாநாட்டின்  பின்னர்  மூன்றாவது அரச, வணிகப் பேரவை மாநாடும் இடம்பெற்றது. 

மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதமர்கள்,  வௌியுறவுத்துறை அமைச்சர்கள், சில நாடுகளின் அரச  தலைவர்கள், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர். 

இந்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வௌியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய கலந்து கொண்டிருந்தார். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினைப் பயன்படுத்தி ஆட்கடத்தல்காரர்கள் மக்களை ஈர்த்து, ஏமாற்றி வரும் நிலை அதிகரித்துள்ளமை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் மாநாட்டில் தெரிவித்தார். 

இலஞ்ச ஊழல் , புலம்பெயர்வு  பற்றிய தவறான தகவல்களை சமாளிப்பதற்கான ஆதாரங்களின் பற்றாக்குறை என்பன முறையற்ற புலம்பெயர்வை எதிர்த்துப் போராடுவதில்  சவாலாக உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  

தவறான வௌிநாட்டுப் பயணங்கள், ஆட்கடத்தல் செயற்பாடுகளின் தகவல்கள், ஆபத்துகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களை அடையாளம் கண்டு, அவர்களைத்  தௌிவுபடுத்துவதும் மாற்று வழிகள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிப்பதும் மிகவும் முக்கியமான விடயமாக அமையும் என வௌியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய மேலும் குறிப்பிட்டார். 

ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக உள்நாட்டு, பிராந்திய, சர்வதேச விடயதானங்களை உள்ளடக்கிய பணிகளை மேற்கொள்வதற்கும்  இதன்போது வௌியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் அழைப்பு விடுத்தார். 

குறித்த மாநாட்டில் இலங்கை வர்த்தகத்துறையின்  தலைமைத்துவத்தை பிரதிநிதித்துவம் செய்து, கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் நிறைவேற்று குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் பங்குபற்றியிருந்தார். 

உலகெங்கிலும் உள்ள அடிமைத்தனத்திற்கு எதிரான பாலி செயல்முறை திட்டத்துடன் இலங்கையும், கெப்பிட்டல் மகாராஜா குழுமமும் தொடர்ந்து இணைந்து செயற்படுகின்றன.