டயனா கமகேவை கைது செய்ய முடியும் என அறிவிப்பு

டயனா கமகேவை கைது செய்ய முடியும்: CID-க்கு நீதிமன்றம் அறிவிப்பு

by Bella Dalima 09-02-2023 | 3:24 PM

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே, குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியமை தௌிவாகியுள்ளதால்,  அவரை கைது செய்ய முடியும் என நீதிமன்றம் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. 

சமூக செயற்பாட்டாளரான குசல லக்மால் ஹேரத் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாடு, கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

டயனா கமகே இலங்கையில் குடியுரிமை இல்லாத பிரித்தானிய பிரஜை எனவும், அவரது பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு ஆகியன போலியானது எனவும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் முறைபாட்டில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​ டயனா கமகே குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இரண்டு பிறப்புச் சான்றிதழ்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளமை, நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் தெரியவருவதாகவும் அவை குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்கள் என்பதாலும் அவரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என நீதவான் தெரிவித்தார்.

குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குறித்த குற்றங்கள் தொடர்பில் உரிய முறையில் செயற்படுவதற்கு  விசாரணை  அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதாகவும் பிரதம நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சுட்டிக்காட்டினார். 

டயனா கமகே, இரண்டு போலி பிறப்புச் சான்றிதழ்களை சமர்ப்பித்து, கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ்  குற்றமில்லையா என, விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் நீதவான் வினவினார். 

எனினும், குறித்த கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை. 

இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 02 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.