English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
08 Feb, 2023 | 8:07 pm
Colombo (News 1st) தற்போதைய திட்டங்களுக்கு அமைய செயற்படும் பட்சத்தில், 2026 ஆம் ஆண்டாகும் போது வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.
நாட்டிற்காக தற்போது தாம் எடுக்கும் தீர்மானங்களின் முக்கியத்துவம் ஓரிரு வருடங்களில் பலருக்கு புரியும் என தனது உரையின் போது ஜனாதிபதி தெரிவித்தார்.
உழைக்கும் போது செலுத்தும் வரியை நீக்கினால் நாடு 100 பில்லியன் ரூபாவை இழக்கும் எனவும் வரி எல்லையை இரண்டு இலட்சம் வரை அதிகரித்தால், நாடு 63 பில்லியன் ரூபாவை இழக்கும் எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, மொத்தமாக 163 பில்லியன் ரூபாவை இழக்கும் நிலையில் நாடு இல்லை என சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்துடனேயே எதிர்கால பயணத்தை முன்னெடுக்க முடியும் எனவும் விமர்சனங்களை முன்வைப்போர் வேறு மாற்று முறைகள் இருந்தால் முன்வைக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கடன் மறுசீரமைப்பு மாத்திரமே தற்போது எஞ்சியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டதுடன், மக்களின் பிரச்சினைகள் குறைந்து வருவதன் மூலம் தாம் பயணிக்கும் பாதை சரியானது என்றே தெரிவதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டை நெருக்கடிக்கு உள்ளாக்கியவர்களுக்கு தண்டனை வழங்குவதை விட நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கே முன்னுரிமை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டின் அரசியல் கட்சிகள் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பாராளுமன்றத்தில் தற்போது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் கூட்டமைப்புகளே உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அவ்வாறான கட்சிகளில் பெரும்பாலானவை பணத்திற்கு விலை போகும் கட்சிகள் என குற்றம் சாட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் அரசியல் கட்சிகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை, ஊடகங்களுக்கு தேசிய கொள்கையொன்று அவசியம் எனவும் அவற்றை மறுசீரமைக்கும் தேவை உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதேவேளை அதிகாரப்பகிர்வு தொடர்பிலும் ஜனாதிபதி தனது உரையின் போது கருத்து தெரிவித்தார்.
1977 ஆம் ஆண்டு இரா.சம்பந்தனும் தானும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டபோது, இருவருக்கும் பொதுவானதொரு கனவு இருந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இருவரும் பாராளுமன்றத்தில் இருக்கின்ற போதே இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிலைபேறான ஒரு தீர்வை வழங்குவதே அந்த கனவு என ஜனாதிபதி கூறினார்.
''அந்தக் கனவு பற்றி அன்று முதல் இன்று வரை கலந்துரையாடுகின்றோம். முயற்சி செய்கின்றோம். முன்னைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆனாலும் இம்முறை எப்படியாவது அதனை வெற்றியடையச் செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம். அதற்காக உங்கள் அனைவரது ஒத்துழைப்பினையும் எதிர்பார்க்கின்றோம். வடக்கு, கிழக்கு யுத்தம் முழு நாட்டையும் பாதித்தது. முழுமையான வடக்கு மாகாணமும் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல பிரதேசங்களும் யுத்தம் காரணமாக பாரிய துன்பங்களை அனுபவித்தன. அப்பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாக கூடுதலான கவனம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்வோம்''
என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வடக்கில் காணிப்பிரச்சினை இருப்பதை அறிந்துள்ள தாம், அவற்றை விடுவிக்க தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியுள்ளதாகவும் கூறினார்.
யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களால் காடுகளாக்கப்பட்ட கிராமங்களின் பல காணிகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் பெயரிடப்பட்டுள்ளன. தற்போது யுத்தம் முடிவடைந்துள்ள போதும், தமக்கு உரித்தான பல காணிகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால், மக்களுக்கு பாரியளவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
''மொனராகலை தொடக்கம் யாழ்ப்பாணம் வரை மக்கள் இப்பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார்கள். 1985 ஆம் ஆண்டின் வரைபடத்தின் பிரகாரம், காடுகள் மற்றும் காணிகளை மீண்டும் வர்த்தமானியில் வெளியிட்டு இந்த அநீதியை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்''
என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான முறைமையினை துரிதப்படுத்தவுள்ளதாகவும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சிறைவைக்கப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.
பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவித மாற்றங்களும் இடம்பெறாது எனவும் மோதல்களுக்குள் அகப்பட்டு பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின்னடைந்துள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக விசேட அபிவிருத்தி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.
பெருந்தோட்ட மக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி தனது உரையில் கவனம் செலுத்தினார்.
''பெருந்தோட்டத் துறைக்காக பாரியளவு சேவையாற்றிய செளமியமூர்த்தி தொண்டமானும் நானும் ஒன்றாக அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டோம். நாம் இருவரும் பெருந்தோட்ட மக்களின் நலனுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட்டோம். தற்போது பெருந்தோட்ட மக்களின் சட்ட ரீதியான அனைத்து உரிமைகளையும் நாம் வழங்கியுள்ளோம். ஆனாலும் பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் இன்னும் எஞ்சியுள்ளன. இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாம் பெருந்தொட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம்''
என அவர் தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தனக்கு A.C.S.ஹமீட் விளக்கமளித்திருந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் சிங்கள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
26 Sep, 2023 | 07:07 PM
26 Sep, 2023 | 03:48 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS