முறையற்ற வரி விதிப்பிற்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்

by Bella Dalima 08-02-2023 | 4:40 PM

Colombo (News 1st) தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைகள், பல்கலைக்கழகங்கள், பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

முறையற்ற வரி விதிப்பினூடாக அரசாங்கம் பொதுமக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளமைக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்ட தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

சுகாதாரம், மின்சாரம், துறைமுகம், பெட்ரோலியம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உள்ளிட்ட 40-க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து  எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இதற்கு இணையாக அரச, தனியார் துறை வைத்தியர்கள் 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒரு பிரிவான அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாகவும் வாகன போக்குவரத்திற்கு  தடை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இதனிடையே, புதிய வரிக்கொள்கைக்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள், கொழும்பு கோட்டை மின்சார சபை தலைமையகத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

நியாயமற்ற வரிக்கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் கொழும்பு கோட்டையின் பல்வேறு வீதிகளில் முன்னெடுக்கப்படுவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோட்டை பொலிஸார் விடுத்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு அமைவாக அமைதியான போராட்டங்கள் மற்றும் பேரணியினை முன்னெடுக்க முடியும் என கோட்டை நீதவான் திலின கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் யாராவது செயற்படும் பட்சத்தில், பொலிஸாருக்கு உள்ள அதிகாரங்களுக்கு அமைய செயற்படுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பின் பல்வேறு வீதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கறுவாத்தோட்ட பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பௌத்தாலோக மாவத்தை, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, தேர்ஸ்டன் வீதி, ஏனர்ஸ்ட் டி சில்வா மாவத்தை உள்ளிட்ட வீதிகளுக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவானிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கையை நிராகரித்த கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ், பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய செயற்படுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, அநீதியான வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்பகிஸ்கரிப்பினால் நாட்டின் பல வைத்தியசாலைகளின் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. 

கொழும்பு - ஹைட்பார்க்கில் பிரதான எதிர்ப்பு நடவடிக்கையும் இடம்பெற்று வருகின்றது.