வரிகள் தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் ஜனாதிபதியின் பணிப்பாளர் கலந்துரையாடல்

by Bella Dalima 07-02-2023 | 8:14 PM

Colombo (News 1st) வரிகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும்  ஜனாதிபதியின் தொழிற்சங்க  பணிப்பாளர் சமன் ரத்னப்பிரியவிற்கும் இடையில்  நிதியமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

கலந்துரையாடலின் மூலம் விரைவான தீர்வுகள், முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வதாகவும் வரி தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரிடம் விரைவான குறுகிய கால தீர்வு யோசனை முன்வைக்கப்படும் எனவும் சமன் ரத்னப்பிரிய கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய வரி விதிப்பு தொடர்பில் தொழிற்சங்கத்தினர் ,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளின் கருத்துகள், ஆலோசனைகளை கருத்திற்கொண்டு ஓரளவு நிவாரணம் வழங்குவதற்கான குறுகிய கால உத்திகள் குறித்து கலந்துரையாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நிதிக்கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கபில சேனாநாயக்க கூறியுள்ளார்.

குறுகிய கால வரித் திட்டத்தின் மூலம் தனிநபர் வருமானத்திற்கு வரி விதிக்கப்படுவதாகவும், ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இது மிகவும் குறைந்த விகிதம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வரிக்கொள்கையினால், தனிநபர் வருமானத்திற்கு விதிக்கப்படும் வரி முறைமையில் பிரச்சினைகள் இருப்பதாகவும் வரிக்கொள்கையை தயாரிப்பதற்கு முன்னர் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடுமாறும், தொழிற்சங்கங்கள் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க தலைவரான லெஸ்லி தேவேந்திர, பொதுஜன பெரமுனவின் பெட்ரோலிய தொழிற்சங்க தலைவர் பந்துல சமன்குமார உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.