நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு; கரிநாளாக பிரகடனம்

by Bella Dalima 04-02-2023 | 8:06 PM

Colombo (News 1st) 'சுதந்திரம் எங்கே' எனும் தொனிப்பொருளிலில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் சிவில் அமைப்பினர்  ஏற்பாடு செய்திருந்த போராட்டம் மற்றும் பேரணி ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்து பல்கலைக்கழகத்தின் பிக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வேவ சிறிதம்ம  தேரர் ஆகியோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 106/1-இன் கீழ்  நீதிமன்ற உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது.

மிரிஹானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட  விடயங்களை அடிப்படையாகக் கொண்டு  நீதிமன்றம் தடை உத்தரவினை விதித்திருந்தது.

சிவில் அமைப்பினர், போராட்டக்கள செயற்பாட்டாளர்கள்,பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பின்னர் போராட்டத்தில்   ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்

இதேவேளை, இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சியினை வழங்குமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து இன்று பாரிய பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டது. 

வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். பேரணி ஆரம்பமாகி பல்கலைக்கழக நுழைவாயிலை சென்றடைந்த போது, பொலிஸாரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், பொலிஸாரின் தடையையும் மீறி பேரணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது.
 
காங்கேசன்துறை வீதியூடாக  யாழ். முற்ற வெளியை அடைந்த பேரணி அங்கிருந்து கிளிநொச்சிக்கான பயணத்தை ஆரம்பித்தது.

இன்று ஆரம்பமான இந்த பேரணி எதிர்வரும் 7 ஆம் திகதி மட்டக்களப்பை சென்றடையவுள்ளது.
 
இதனிடையே, இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் 'தமிழருக்கு இருள் நாள்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

 ஆர்ப்பாட்டம் காந்திய அடிப்படையில் அஹிம்சையாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து கட்சி உறுப்பினர்கள் வெள்ளைத் தொப்பிகளை அணிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கட்சியின் உறுப்பினர்களால் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, பேரணியாக கல்லடி பாலத்திற்கு சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு எதிர்ப்பில் ஈடுபட்டனர். 

இதனிடையே 75 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தலைமையில், யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். 

யாழ். பிரதேச செயலக முன்றலிலிருந்து பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர். 

காந்தி பூங்காவில் இருந்து மட்டக்களப்பு மத்திய பஸ் தரிப்பு நிலையம் வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
இதேவேளை, இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் என தெரிவித்து முல்லைத்தீவு நகரிலும் இன்று கவனயீர்ப்பு  போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்திலும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரிநாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் தலைவர் V.S.சிவகரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருகோணமலையிலும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

திருகோணமலை தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் கலந்துகொண்டிருந்தனர். 
 
இதேவேளை சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த போராட்டம் இன்று பிற்பகல் அநுராதபுரத்தில் முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திராளனவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை அளுத் பியாபத் அமைப்பினர்  பத்தரமுல்லை தியத்த உயனவிற்கு முன்பாக இன்று  போராட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே, உண்மையான சுதந்திரத்தை இலங்கைவாழ் மக்களால் அனுபவிக்க முடியவில்லை என தெரிவித்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இலங்கைவாழ் மக்களுக்கு சுதந்திரம் இல்லாத நிலையில், எதற்காக பெருந்தொகை பணத்தை செலவிட்டு சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பினர்.