சுதந்திர தினம் வடக்கு, கிழக்கு மக்களுக்கு கரிநாள்

சுதந்திர தினம் வடக்கு, கிழக்கு மக்களுக்கு கரிநாளாக அமைந்துள்ளது: C.V.விக்னேஸ்வரன் அறிக்கை

by Bella Dalima 04-02-2023 | 4:26 PM

Colombo (News 1st) பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி சுதந்திர தினமான இன்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு கரிநாளாக அமைந்துள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்,  பாராளுமன்ற உறுப்பினர் C.V.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

காலி முகத்திடலில் இடம்பெற்ற தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் பிரதான நிகழ்வில் இன்று கலந்துகொள்ளாத நிலையில்,  பாராளுமன்ற உறுப்பினர் C.V.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். 

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்து சுதந்திர தினத்தை கரிநாளாக அடையாளப்படுத்தியுள்ளமைக்கு  தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஓய்வு பெற்ற  நீதியரசருமான பாராளுமன்ற உறுப்பினர் C.V.விக்னேஸ்வரன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். 

பெப்ரவரி மாதம்  4  ஆம் திகதி பெரும்பான்மை மக்களுக்கு சுதந்திர தினமாக அமைந்தாலும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் அதனை சுதந்திரமற்ற, உரிமைகளற்ற , சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் நாளாகவே பார்ப்பதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய தினம் வடக்கு ,கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்ற தொழில்  புறக்கணிப்பு மற்றும் கடையடைப்பு
என்பன மனோநிலையையும் மன ஏக்கத்தையும் உலகுக்கு வெளிப்படுத்துவதற்கான  ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, நாட்டில் வாழும் தமிழ் மக்கள் எப்போது  பூரண அதிகாரப் பகிர்வை பெறுவதற்கு  சிங்கள மக்கள் அனுமதிக்கின்றார்களோ அன்றைய தினமே தமிழ் மக்களின் விடிவு நாள் எனவும் அதுவரையில் வருடந்தோறும் பெப்ரவரி 4 ஆம் திகதி என்ற கரிநாள் வந்து போய்க்கொண்டிருக்கும் எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்  பாராளுமன்ற உறுப்பினர் C.V.விக்னேஸ்வரன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.