அரச செலவுகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான சுற்றறிக்கை வௌியீடு

அரச செலவுகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான சுற்றறிக்கை வௌியீடு

அரச செலவுகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான சுற்றறிக்கை வௌியீடு

எழுத்தாளர் Staff Writer

02 Feb, 2023 | 6:55 am

Colombo (News 1st) 2023ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 06 வீதத்தை இரத்துச் செய்தல் மற்றும் அரச செலவுகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் திட்டமிடப்பட்டுள்ள அரசின் உத்தேச வருமானத்தை திரட்டுதல் தொடர்பில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலையில் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை குறைத்துக்கொள்ளும் நோக்கில், மீண்டெழும் செலவை 06 வீதத்தால் இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், மருத்துவ செலவுகள், வாடகை வரி, உள்ளூராட்சி மன்றங்களுக்கான வரி, ஓய்வூதிய சலுகைகள், உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு கடன்களுக்கான வட்டியை செலுத்துதல், திறைசேரி பற்றுச்சீட்டு, திறைசேரி முறிகள் மீதான சலுகைகள், அத்தியாவசிய நலன்புரி கொடுப்பனவுகளை செலுத்துதல் மற்றும் அரசியலமைப்பு மற்றும் ஒப்பந்த இணக்கப்பாடுகள் தொடர்பில் வரவு செலவுத்திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை தவிர்த்து, ஏனைய அனைத்து மீண்டெழும் செலவுகளுக்கான மொத்த நிதியில் 06 வீதத்தை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கான நிவாரணங்களை வழங்குதல், சமுர்த்தி, முதியோர், சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு, ஊனமுற்றோருக்கான கொடுப்பனவு, கர்ப்பிணி தாய்மார்களுக்கான போஷாக்கு உணவுத் திட்டம், முன்பள்ளிகளுக்கான காலை நேர உணவு, போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்குணவு திட்டம் ஆகியவற்றிற்கு புதிய சுற்றறிக்கையூடாக எவ்வித இடையூறுகளும் ஏற்படாது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்