இந்திய பட்ஜெட்: வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு

இந்திய மத்திய அரசின் வரவு செலவுத் திட்டம்: தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 3 இலட்சம் ரூபாவாக உயர்வு

by Bella Dalima 01-02-2023 | 4:17 PM

India: இந்திய பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடர் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உரையுடன் நேற்று (31) ஆரம்பமானது. 

இதை தொடர்ந்து மக்களவையில் இன்று வரவு செலவுத் திட்டத்தை  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயற்பாடுகளை முதலில் பட்டியலிட்ட நிதி அமைச்சர், துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார். 

இந்த வரவு செலவுத் திட்டம் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

வருமான வரி விலக்கு தொடர்பான சலுகையை எதிர்பார்த்து காத்திருந்த சம்பளதாரர்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஆறுதல் கிடைத்துள்ளது. 

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை இந்திய ரூ.2.5 இலட்சத்தில் இருந்து ரூ.3 இலட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், வருமான வரி தள்ளுபடி வரம்பை இந்திய ரூ.5 இலட்சத்தில் இருந்து ரூ.7 இலட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

இதன் மூலம் ஆண்டுக்கு 7 இலட்சம் இந்திய ரூபா வரை வருவாய் ஈட்டுவோர் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.  இந்த அறிவிப்பானது மாத சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இனிப்பான செய்தியாக கருதப்படுகிறது. 

மேலும், வரி விகிதங்களில் மாற்றம் செய்தும் வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி,

? இந்திய ரூ. 3 இலட்சம் வரை - வரி இல்லை 
? ரூ.3 இலட்சம் முதல் ரூ.6 இலட்சம் வரை- 5% வரி (வரி தள்ளுபடி உள்ளதால் இந்த பிரிவினர் வரி செலுத்த தேவையில்லை) 
? ரூ.6 இலட்சம் முதல் ரூ.9 இலட்சம் வரை - 10% வரி 
? ரூ.9 இலட்சம் முதல் ரூ.12 இலட்சம் வரை - 15% வரி
? ரூ.12 இலட்சம் முதல் ரூ.15 இலட்சம் வரை - 20% வரி 
? ரூ.15 இலட்சத்திற்கு மேல்- 30% வரி