எதிர்ப்பு பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

by Bella Dalima 01-02-2023 | 3:45 PM

Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணியை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

களனி பல்கலைக்கழகத்திற்கு அருகிலிருந்து இந்த எதிர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து கொழும்பு - கண்டி பிரதான வீதியூடாக கிரிபத்கொட நோக்கி  செல்வதற்கு மாணவர்கள் முயன்றபோது, நீதிமன்ற உத்தரவு உள்ளதாக தெரிவித்து பொலிஸார் அவர்களை தடுத்தனர்.

தொடர்ந்தும் முன்னோக்கி செல்வதற்கு முயற்சித்த மாணவர்களை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

பின்னர் களனி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மீண்டும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, 167 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இன்று சிறைச்சாலையில் இருந்து வௌியேறியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளில் இருந்து  வசந்த முதலிகே நேற்று (31) விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட மூன்று வழக்குகளில் அவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டிருந்தது.