அதானிக்கு அபுதாபியில் இருந்து நீளும் நேசக்கரங்கள்

தொடர் சரிவை சந்தித்து வரும் அதானி குழுமத்திற்கு அபுதாபியில் இருந்து நீளும் நேசக்கரங்கள்

by Bella Dalima 31-01-2023 | 5:19 PM

Colombo (News 1st) பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து, பெரும் இழப்பை சந்தித்து வரும் அதானி குழுமத்திற்கு அபுதாபியின் இருந்து நேரக்கரங்கள் நீண்டுள்ளதாக BBC செய்தி வௌியிட்டுள்ளது. 

Hindenburg ஆராய்ச்சி நிறுவன ஆய்வறிக்கை வெளியானது முதலே அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. 

இதனால், இக்கட்டான நிலையில் இருக்கும் அதானி குழுமத்திற்கு அபுதாபியில் இருந்து நேசக்கரங்கள் நீண்டுள்ளன.

உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த கௌதம் அதானியின் நிறுவன பங்குகள் ஒட்டுமொத்தமாக சரிவை சந்தித்தது பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. 

பங்குச்சந்தை ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் வணிகத்தை தொடங்குவதும், சிறிது நேரத்திலேயே அதானி குழுமத்தின் 7 நிறுவன பங்குகளும் வீழ்ச்சியால் சென்செக்ஸ் சரிவை சந்திப்பதும் கடந்த சில நாட்களாக வாடிக்கையாகிவிட்டது.

அதானி குழுமம் மட்டுமின்றி, கௌதம் அதானிக்கு சொந்தமான மற்ற நிறுவனங்களும் பங்குச்சந்தையில் சரிவை எதிர்கொண்டுள்ளன. 

Hindenburg ஆய்வறிக்கை வெளியான பிறகு, பங்குச்சந்தையில் கடந்த வாரத்தில் மாத்திரம் அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு 50 பில்லியன் டொலர்கள் வரை சரிந்திருப்பதாக Reuters செய்தி வௌியிட்டுள்ளது. 

அதானி குழுமத்தின் மதிப்பு தொடர்ந்து சரிவதால், அதில் பெரும் பகுதியை தன் வசம் வைத்துள்ள கௌதம் அதானியின் சொத்து மதிப்பும் கணிசமாக வீழ்ச்சி கண்டிருக்கிறது. இதனால், உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்கும் கீழே அவர் சரிந்துவிட்டதாக Bloomberg பட்டியல் கூறுகிறது. 

11-வது இடத்தில் இருக்கும் கௌதம் அதானி தற்போதைய நிலை தொடர்ந்தால், வெகு விரைவில் ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை மற்றொரு இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியிடம் இழப்பார் என்றும் அது கணித்துள்ளது.

Hindenburg ஆய்வறிக்கையால் பங்குச்சந்தையில் நேரிட்ட சரிவை தடுத்து நிறுத்த அதானி குழுமம் பலவாறான உத்திகளைக் கையாண்டு வரும் சூழலில்தான், அபுதாபியில் இருந்து உதவிக்கரங்கள் நீண்டுள்ளன. 

அபுதாபி அரச குடும்பத்திற்கு நெருக்கமான இண்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி அதானி குழுமத்தில் முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இத்தகவலை BBC செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 

"அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் வலுவான அடிப்படை மீது எங்களுக்குள்ள நம்பிக்கையின் பேரில்தான் அதானி குழுமத்தில் முதலீடு செய்யும் ஆர்வம் வந்தது. நீண்ட கால அடிப்படையில் வளர்ச்சிக்கான சாத்தியங்களையும், முதலீட்டாளர்களுக்கு கூடுதல் ஆதாயம் தரும் வாய்ப்புகளையும் பார்க்கிறோம்," என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சயீது பசார் ஷூயிப்  தெரிவித்துள்ளார். 

இண்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி, அபுதாபியில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய நிறுவனம். இந்நிறுவனம் அதானி குழுமத்தில் ஏற்கெனவே கடந்த ஆண்டும் பெருந்தொகையை முதலீடு செய்திருக்கிறது.

எவ்வாறாயினும், Hindenburg ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள பொய்யான கூற்றுகள் இந்தியா மீதான  தாக்குதல்" என அதானி குழுமம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.