13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை இணக்கம்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை இணக்கம்

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2023 | 4:32 pm

Colombo (News 1st) 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்து செய்வதா, இல்லையா என்பதை கட்சித் தலைவர்கள் தீர்மானிக்கும் வரை, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்த சட்டத்தை நீக்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் எவரும் தனிப்பட்ட பிரேரணையை முன்வைக்க முடியுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லையெனில், அதனை நடைமுறைப்படுத்த நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியுள்ளார். 

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதியரசர் குழாம் முன்வைத்துள்ள தீர்ப்பிற்கமையவே செயற்படுவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். 

நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது, காணிப் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் அதிகமான காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டதாக இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது சுமார் 3000 ஏக்கர் வரையான காணிகளே  மீள ஒப்படைக்கப்பட வேண்டியுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், எஞ்சிய காணிகளையும் பகிர்ந்தளிப்பதற்கான பொறுப்பை பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிணங்க, பாதுகாப்பு தரப்பினர் முன்வைக்கும் ஆலோசனைகளுக்கு அமையவே எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், காணி ஆணைக்குழுவை விரைவில் நியமித்து அதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் மார்ச் மாதமளவில்  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

காணி ஆணைக்குழுவிற்காக மாகாண ரீதியில் 09 பேரை நியமிக்குமாறு அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன்,
மேலும் 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர். இதன் பின்னரே தேசிய காணி கொள்கையொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
பின்னர் காணி ஆணைக்குழுவால் தேசிய காணிக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியும் என ஜனாபதி தெரிவித்துள்ளார். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்