இந்தியாவின் 74 ஆவது குடியரசு தின விழா கோலாகலம்

இந்தியாவின் 74 ஆவது குடியரசு தின விழா கோலாகலம்

by Bella Dalima 26-01-2023 | 4:23 PM

 INDIA: இந்தியாவின் 74 ஆவது குடியரசு தின விழா இன்று (26) கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இடம்பெற்ற குடியரசு தின நிகழ்வுகளில் எகிப்து அதிபர் Abdel Fattah El-Sisi சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 

டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் இடம்பெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் குடியரசு தின விழா இதுவாகும். 

இதனையடுத்து, காலை 10.30 மணிக்கு அணிவகுப்பு ஆரம்பமானது. 

ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கிய இந்த அணிவகுப்பு விஜய் சவுக், இந்தியா கேட், செங்கோட்டை வரை செல்கிறது.

இந்த அணிவகுப்பில் இராணுவப் பிரிவில் முப்படைகளுடன் குதிரைப் படை மட்டுமின்றி ஒட்டகப் படையும் பங்கேற்றிருந்தது. 

கடற்படையில் 144 இளம் மாலுமிகள் பங்கேற்றிருந்ததுடன், முதல் முறையாக 3 பெண் அதிகாரிகளும், 6 அக்னி வீரர்களும் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும். 

விமான படையில் 4 அதிகாரிகளுடன் 148 வீரர்கள் அணிவகுத்தனர். 148 தேசிய மாணவர் படையினரும், 448 நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர். அணி வகுப்பில் எகிப்து நாட்டு படைப் பிரிவும் பங்கேற்றிருந்தது.

விழாவில் தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெற்றது. 

இந்தியா முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் வரலாறு காணாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

இதேவேளை, சென்னை மெரினாவில் இடம்பெற்ற குடியரசு தின விழாவில் தேசியக்கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். 

முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். 

அதனை தொடர்ந்து வீர தீரச்செயலுக்கான அண்ணா பதக்கங்களை 5 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

சிறப்பு காவல் நிலையங்களுக்கான முதலமைச்சர் விருது 3 காவல் நிலையங்களுக்கு இதன்போது வழங்கப்பட்டது.