முட்டை விலை குறித்து COPE குழு கூட்டத்தில் ஆராய்வு

முட்டை விலை தொடர்பில் COPE குழு கூட்டத்தில் ஆராய்வு

by Bella Dalima 26-01-2023 | 5:27 PM

Colombo (News 1st) வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் முட்டையை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக COPE குழு தெரிவித்துள்ளது. 

வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு, விவசாய அமைச்சு, நுகர்வோர் விவகார அதிகார சபை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட COPE குழு கூட்டத்தில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

இதன்போது, முட்டை தொடர்பான செலவினங்களை கருத்திற்கொண்டு, முட்டைக்கான விலைச் சூத்திரத்தை அதிகாரிகள் முன்வைத்த போதிலும், அதனை செயற்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்தை மீளாய்வு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

கோழிப் பண்ணைத்துறை ஸ்திரமடையும் வரை ஒன்றரை மாத காலத்திற்கு முட்டை ஒன்றின் விலை 51 ரூபாவாக  பேணப்படுமாயின்,  பின்னர் முட்டை விலையைக் குறைக்க முடியும் என  தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக COPE குழு சுட்டிக்காட்டியது. 

நாளொன்றுக்கு ஏறத்தாழ 3 மில்லியன் முட்டைக்கான தற்காலிக தட்டுப்பாடு காணப்படுவதாக COPE குழுவில் வெளிப்படுத்தப்பட்டது. 

எனவே, நுகர்வோரை கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவு முட்டையை இறக்குமதி செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உள்நாட்டு கோழிப் பண்ணைத்துறையை பாதுகாத்து, நியாயமான விலையில் முட்டைகளை வழங்குவது குறித்து ஆராய வேண்டும் எனவும் அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் COPE குழு அறிவுறுத்தியுள்ளது.