கோறளைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக கனகரத்தினம் கமலநேசன் தெரிவு

by Staff Writer 24-01-2023 | 1:00 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு - கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கனகரத்தினம் கமலநேசன் இன்று(24) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச சபைக்கான 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இரு தடவைகள் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியடைந்திருந்தது.

இதன் காரணமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சோபா ரஞ்சித் தமது தவிசாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.

கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் நா.மணிவண்ணன் தலைமையில் இன்று(24) நடைபெற்றது.

தவிசாளர் பதவிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கனகரத்தினம் கமலநேசன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் காளிகுட்டி நடராசா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதனால் திறந்த வாக்கெடுப்பு மூலம் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் காளிகுட்டி நடராசா 8  வாக்குகளையும் தமிழரசு கட்சியின் உறுப்பினர் கனகரத்தினம் கமலநேசன் 12 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

இதன்மூலம் கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கனகரத்தினம் கமலநேசன் தெரிவு செய்யப்பட்டார்.

23 உறுப்பினர்கள் உள்ள குறித்த சபை வாக்கெடுப்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 02 உறுப்பினர்களும்
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினரும் நடுநிலை வகித்தனர்.