ஸ்திரத்தன்மையை அடைந்தால் தான் நிலையான வளர்ச்சி

இலங்கை ஸ்திரத்தன்மையை அடைந்த பின்னரே நிலையான வளர்ச்சியை அடைய முடியும்: மத்திய வங்கி ஆளுநர்

by Bella Dalima 24-01-2023 | 7:15 PM

Colombo (News 1st) கடன் விவகாரத்தில் ஸ்திரத்தன்மையை அடைந்த பின்னரே இலங்கையால் நிலையான வளர்ச்சியை அடைய முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வர்த்தக, இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பிலான தகவல்களை வௌியிடும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை தெரிவித்ததாக Reuters செய்தி வௌியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திற்கு தேவையான நிதி உத்தரவாதத்தை இந்தியா ஏற்கனவே வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவும் ஜப்பானும் விரைவில் நிதிச் சான்றிதழ்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களை 6 மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய முடியும் என நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.