அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் உருவச்சிலை யாழில் திறந்து வைப்பு

by Staff Writer 23-01-2023 | 3:35 PM

Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் உருவச்சிலை இன்று(23) யாழ். வலிகாமம் தெற்கில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

யாழ்.வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் நிதிப் பங்களிப்பில் பிரதேச சபைக்கு முன்பாக இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், போராசிரியர் சி.சிறிசற்குணராசாவினால் அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் உருவச்சிலை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவராகவும் 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்திருந்தார்.

அன்னார் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 02ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்டார்.