.webp)
Colombo (News 1st) பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை தடுக்க பொலிஸார் இன்று நடவடிக்கை எடுத்தனர்.
ஒரு இலட்சம் ரூபாவிற்கு அதிக ஊதியம் பெறுவோரிடம் 6 முதல் 36 வீதம் வரை வருமான வரி அறவிடும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பமானது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னொக்கி பயணித்த போது, கொழும்பு தாமரை தடாகத்திற்கு அருகில் பொலிஸார் இடையூறு விளைவித்தனர்.
பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்தினர் பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியில், பஸ்ஸொன்றில் ஏறி நிதியமைச்சு முன்பாக திரண்டனர்.
இதனையடுத்து, நிதியமைச்சு முன்பாக ஒன்றிணைந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.
பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் , அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் , இலங்கை வங்கி சேவை சங்கம் , மின்சார பொறியியலாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு லோட்டஸ் வீதியூடான போக்குவரத்து சில மணித்தியாலங்கள் தடைப்பட்டதுடன், பொலிஸ் கலகத்தடுப்பு வீரர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே, காலி முகத்திடலூடாக நிதியமைச்சுக்கு முன்பாக வருகை தர முயற்சித்த பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க சம்மேளனத்தினரை தடுப்பதற்கும் பொலிஸார் முயற்சித்தனர்.
அவர்களை உடனடியாக கலைந்து செல்லுமாறு இதன்போது பொலிஸார் அறிவித்தனர்.
தடையை பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி செல்ல முயற்சித்த போதிலும் பாதுகாப்பு பிரிவினர் அதற்கு இடமளிக்கவில்லை.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நிதியமைச்சுக்குள் நுழைய பொலிஸார் இடமளிக்கவில்லை.
இதன் பின்னர் கொழும்பு லோட்டஸ் வீதி மற்றும் நிதியமைச்சு முன்பாகவிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.