.webp)
Colombo (News 1st) இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை இன்று சந்தித்தார்.
கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய தூதரின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினரான இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ,
தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என். ஶ்ரீகாந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதனிடையே, இந்திய வௌிவிவகார அமைச்சரை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் இந்திய வௌிவிவகார அமைச்சரை கொழும்பில் நேற்று (19) சந்தித்துக் கலந்துரையாடினர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் , வேலுசாமி இராதாகிருஷ்ணன் , மயில்வாகனம் உதயகுமார் , எம். வேலுகுமார் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பிற்காக, வௌிவிவகார அமைச்சருக்கு தமது நன்றியைத் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு, இந்திய பல்கலைக்கழகம் ஒன்றின் வளாகம் ஒன்றை இலங்கை அரச பல்கலைக்கழகமாக அமைக்கவும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலப் பாடங்களுக்கான ஆசிரியர் பயிற்சி கலாசாலையை அமைக்கவும் தாதியர் பயிற்சிக் கல்லூரியை அமைக்கவும் தமிழ் முற்போக்கு கூட்டணியினரால் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனிடையே, இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள 10,000 இந்திய வீட்டுத் திட்டங்களை விரைவுபடுத்த மாற்று பொறிமுறை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மலையகத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான புதிய திட்டங்களை இந்தியா அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வௌிவிவகார அமைச்சரை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் , செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோர் கொழும்பில் நேற்று (19) மாலை சந்தித்துள்ளனர்.
வௌிவிவகாரம் தொடர்பில் தனது 40 வருட அனுபவத்தில் முதன்முறையாக இலங்கையின் தெற்கு அரசியலில் தமிழ் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான நல்ல அறிகுறிகள் தோன்றுவதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளதாக நிசாம் காரியப்பர் சுட்டிக்காட்டினார்
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் எட்டப்படும் எந்தவொரு இணக்கப்பாட்டிலும் முஸ்லிம்கள் ஒருதரப்பாக பங்குபற்றுவதற்கான சகல உரிமை இருப்பதாக இதன்போது ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளதுடன், அதனை இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளதாக நிசாம் காரியப்பர் குறிப்பிட்டார்.