.webp)
Colombo (News 1st) அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படைகள் இணைந்து முன்னெடுக்கும் 2023 ஆம் ஆண்டிற்கான CARAT (Cooperation Afloat Readiness and Training Exercise) பயிற்சிகள் இன்று ஆரம்பமாகின.
இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, தயார்நிலை மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் இலங்கை விமானப்படையும் இணைந்துள்ளது.
அமெரிக்க கடற்படையின் பசுபிக் பிராந்திய படைகளால் நடத்தப்படும் 2023 ஆம் ஆண்டிற்கான இருதரப்பு பயிற்சியின் ஆரம்ப நிகழ்வு திருகோணமலை கடற்படைத்தளத்திலும் கொழும்பு துறைமுகத்திலும் முன்னெடுக்கப்பட்டது.
சுதந்திர இந்தோ - பசுபிக் வலயத்தை உறுதிப்படுத்துதல், பிராந்தியங்களுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை பேணுதல், கடல்சார் பங்களிப்பை நிலைநிறுத்தி வலுப்படுத்தல், கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தல் ஆகிய விடயங்கள், CARAT பயிற்சி நடவடிக்கையின் மிக முக்கிய நோக்கமாகும்.
இலங்கை கடற்படை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை விமானப்படை ஆகியன இந்த பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன், ஜப்பான் தற்காப்பு கடல்சார் படை மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்பு பிரிவு ஆகியனவும் இதில் பங்கேற்றுள்ளன.
இந்த நடவடிக்கைகளில் தரை மற்றும் கடல்சார் பயிற்சிகள் நாளை முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
இந்த பயிற்சிகளுக்காக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான USS Anchorage (LPD-23) கப்பல் கொழும்பு துறைமுகத்தை நேற்று (19) வந்தடைந்தது.