பெப்ரவரியில் பதவியை இராஜினாமா செய்வதாக நியூஸிலாந்து பிரதமர் அறிவிப்பு

by Bella Dalima 19-01-2023 | 8:20 AM

Colombo (News 1st) எதிர்வரும் பெப்ரவரி மாதம் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் (Jacinda Ardern) அறிவித்துள்ளார். 

கட்சியின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.

நியூஸிலாந்தின் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பிரதமரின் இராஜினாமா அறிவிப்பு வௌியாகியுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி, பிரதமர் பதவியிலிருந்து ஜெசிந்தா ஆர்டன் பதவி விலகியதன் பின்னர் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. 

தனது 37 ஆவது வயதில் ஜெசிந்தா ஆர்டன் நியூசிலாந்தின் பிரதமராக கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்றார்.

உலகம் முழுவதும் வேகமாக பரவிய COVID-19 வைரஸ் தொற்று , க்ரைஸ்ட்சேர்ச் பயங்கரவாத தாக்குதல், ஐலண்ட் தீ பரவல் உள்ளிட்ட நெருக்கடி நிலைமைகளின் போது, நியூசிலாந்தை ஜெசிந்தா ஆர்டன் நேர்த்தியாக வழிநடத்தியிருந்தமை நினைவுகூரத்தக்கது. 

அடுத்த நிலைக்கு நான் தயாராக வேண்டும்.எனினும், என்னால் முன்னரைப் போன்று அதனை செய்ய முடியாது. அதனால் மீண்டும் தேர்தலை எதிர்கொள்ளப்போவதில்லை என இன்று அறிவிக்கின்றேன். அதேபோன்று, என்னுடைய பிரதமர் பதவி பெப்ரவரி 7 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுக்கு வரும். கடந்த ஐந்து வருடங்கள் எனது வாழ்நாளில் மிகவும் இனிமையானவை. இந்த காலப்பகுதியில் வெவ்வெறு சவால்களை எதிர்கொண்டேன். இந்த பதவியில் நீடிப்பதென்பது எவ்வளவு சிரமமானது என்பது எனக்குத் தெரியும். அதன் காரணமாக பதவியில் என்னால் தொடர்ந்தும் நீடிப்பதற்கான சக்தி இல்லை என கூறுகின்றேன். எனது இந்த அறிவிப்பின் பின்னர் பலர் பல்வேறு கருத்துக்களை கூறுவார்கள். பாரிய நெருக்கடிகளை கடந்து கடமையாற்றியுள்ளேன். நானும் ஒரு பெண். மக்களுக்காக எம்மால் முடிந்த அனைத்து விடயங்களையும் அரசியல்வாதியாக நாம் செய்வோம். அதன் பின்னர் அதற்கு விடை கொடுக்க நேரிடும். இது என்னுடைய விடைபெறும் காலம் என நினைக்கின்றேன்...

என தனது உரையில் அவர் தெரிவித்துள்ளார். 

37 வயதில் பிரதமரான ஜெசிந்தா மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.