தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு கொலை அச்சுறுத்தல்; CID விசாரணை

by Bella Dalima 19-01-2023 | 7:49 PM

Colombo (News 1st) உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு  வேட்புமனு கோரப்பட்டுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஐந்து பேரில் இருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில்  பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் K.P.பத்திரண மற்றும் S.B. திவாரத்ன  ஆகியோர் பொலிஸ் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். 

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து  விலகுமாறு நேற்று  மாலை 3 மணியளவில் அநாமதேய தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டதாக  K.P.பத்திரண தெரிவித்துள்ளார். 

ஆணையாளர்  பதவியில் இருந்து விலகாவிட்டால்,  வீட்டில் உள்ளவர்களுக்கு இடையூறு  விளைவிக்கப்படும் என தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் தன்னை போராட்டத்தின் தலைவர் என கூறிக்கொண்டதாகவும் பத்திரண தெரிவித்துள்ளார். 

இந்த  அச்சுறுத்தல் தொடர்பில் அவர்  கொம்பனி வீதி பொலிஸிலும் பொலிஸ்மா அதிபரிடமும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளார். 

இதேவேளை,  நேற்று WhatsApp மூலம் தொடர்பினை ஏற்படுத்தி, ஆணைக்குழுவில் இருந்து விலகுமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் S.B.திவாரத்ன தெரிவித்துள்ளார். 

அதன் பின்னர் குறித்த நபர் தனது வீட்டினை வீடியோ பதிவு செய்து, அதனை WhatsApp-இல் அனுப்பியதாகவும் திவாரத்ன கூறியுள்ளார். 

இது தொடர்பில் கடவத்தை பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பிரகாரம், குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.