கல்முனை மாநகர சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

by Bella Dalima 19-01-2023 | 4:16 PM

Colombo (News 1st) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கல்முனை மாநகர சபைக்கு வேட்புமனு ஏற்றுக்கொள்வதை தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபைக்கு வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுவதை ஆட்சேபித்து சாய்ந்தமருதை சேர்ந்த அஹமட் லெப்பை மொஹம்மட் சலீம் , அஹமட் ரஹிம் மொஹம்மட் ஹசீம் ஆகியோர் தாக்கல் செய்திருந்த அடிப்படை  உரிமை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த இடைக்கால தடையுத்தரவு, வழக்கு விசாரணை நிறைவு பெறும் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட , யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், அதன் உறுப்பினர்கள், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர், அதன் உறுப்பினர்கள், அம்பாறை தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் உதவி தெரிவத்தாட்சி அதிகாரி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பிக்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆஜராகியிருந்தார்.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான சுரேன் ஞானராஜ், ரஷ்மி டயஸ், ஷியாமலி லியனகே ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதேவேளை, இந்த மனுக்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் விண்ணப்பம் செய்துள்ளார்.

உரிய ஆவணங்களுடன் இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய முடியும் என உயர் நீதிமன்றம் இதன்போது அறிவித்துள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.