மாணவி கொலை: கைதான மாணவருக்கு விளக்கமறியல்

பல்கலைக்கழக மாணவி கழுத்தறுத்து கொலை: கைதான மாணவருக்கு ஜனவரி 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Bella Dalima 18-01-2023 | 6:54 PM

Colombo (News 1st) கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதான பல்கலைக்கழக மாணவர் ஜனவரி 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குதிரைப்பந்தய திடலில் 24 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவரை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய சந்தர்ப்பத்தில் பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றது.

சந்தேகநபர் கடந்த பல வருடங்களாக ஒருவகை மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவருக்கு உளநல மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டுமென சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி உபுல் ரணசிங்க இன்று மன்றில் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உளநல மருத்துவ பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஒருவரிடம் அழைத்துச்சென்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் ஆய்வுப் பிரிவில் 03 ஆம் ஆண்டில் கல்விகற்கும் 24 வயதான மாணவி கொலை செய்யப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.