உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்தில் 18 பேர் பலி

உக்ரைனில் பாலர் பாடசாலை அருகில் வீழ்ந்து தீப்பிடித்த ஹெலிகாப்டர்: அமைச்சர் உட்பட 18 பேர் பலி

by Bella Dalima 18-01-2023 | 4:12 PM

Colombo (News 1st) உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) அருகே இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில், அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

கீவ் நகரில் உள்துறை அமைச்சர் டென்னிஸ் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே வீழ்ந்து நொறுங்கியதில் தீப்பற்றி எரிந்தது.

இந்த ஹெலிகாப்டர் பாலர் பாடசாலை ஒன்றின் அருகில் வீழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் உள்துறை அமைச்சர் Denis Monastyrsky, முதல் துணை அமைச்சர் Yevheniy Yenin,செயலாளர் Yuriy Lubkovychis, இரண்டு சிறுவர்கள் உட்பட 18 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்தவர்களில் விமானத்தில் இருந்த 9 பேர் தவிர ஏனையவர்கள் உள்ளூர்வாசிகள் எனவும், தமது பிள்ளைகளை பாலர் பாடசாலைக்கு அழைத்துச் சென்றிருந்தவர்களும் அடங்குவதாகவும் CNN செய்தி வௌியிட்டுள்ளது.

மேலும், விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் கீழே வீழ்ந்து தீப்பற்றி எரிந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து உக்ரைன் அரசு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.