கொழும்பு பல்கலைக்கழக மாணவி கழுத்தறுத்து கொலை; மாணவர் கைது

by Bella Dalima 17-01-2023 | 5:38 PM

​Colombo (News 1st) கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் ஆய்வு பிரிவில் கல்விகற்கும் மாணவி ஒருவர் இன்று நண்பகல் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குதிரைப்பந்தயத் திடலுக்கு அருகே இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த யுவதி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் ஆய்வு பிரிவில் மூன்றாம் ஆண்டில் கல்விகற்கும் 24 வயதான மாணவி ஆவார்.

இன்று நண்பகல் 12 மணியளவில் குறித்த யுவதி தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையாளியாக சந்தேகிக்கப்படும் இளைஞர், குதிரைப்பந்தய திடலுக்கு அருகில் ஓடும் காட்சி CCTV காணொளியில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான நீதவான விசாரணைகள் இன்று இடம்பெற்றன.

ஹோமாகமவை சேர்ந்த சத்துரி ஹங்சிகா மல்லிகாராச்சி எனும் யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை அனுலா வித்தியாலயத்தில் அவர் கல்வி பயின்றுள்ளார். இவர், கடந்த சில காலமாக சமூக ஊடகங்களின் ஊடாக ஏனைய மாணவர்களுக்கு கற்பித்து வந்துள்ளார். சத்துரி ஹங்சிகா, 02 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதுடன், அவரது பெற்றோர் இராணுவத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்றவர்கள் என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.