.webp)
Colombo (News 1st) தைத்திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி உள்ளிட்டோர் தமது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.
கிழக்கின் தானியக் களஞ்சியம் என அழைக்கப்படும் இலங்கையில் உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிசெய்து தன்னிறைவு பெற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கான அர்த்தமுள்ள சந்தர்ப்பமாக இவ்வருட தைப்பொங்கல் பண்டிகையை கருதுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
விவசாயத்தை நவீனமயப்படுத்துவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ள அதேவேளை, சர்வதேச சந்தையின் போட்டித் தன்மைக்கேற்ப தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வினைத்திறனுடனான இலாபகரமான விவசாயத்தை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி தமது பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் புதிய பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்புத் திட்டத்திற்கு பங்களிப்பதன் மூலம் பொருளாதாரச் செழிப்புடைய நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களும் இந்த தைப்பொங்கல் தினத்தில் ஒன்றிணைய வேண்டுமெனவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
சூரிய பகவானை வணங்கி, உலக மக்களுக்கு உணவளித்து உயிர் காக்கும் உழவர்களைப் போற்றுவதுடன் விவசாயம் செழிப்படைந்து, வறுமை நீங்கி, செழிப்பான நாட்டை உருவாக்கும் பயணத்திற்கு இத் தைப்பொங்கல் பண்டிகை ஆசிர்வாதமாக அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருங்கடியான இக்காலகட்டத்தில் விவசாயத்துறையின் பங்களிப்பு அளப்பரியது என்பதனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வதற்கான நாளாக தைத்திருநாள் அமைய பிரார்த்திப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தமது பொங்கல் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு அமைவாக இலங்கையர்களாக இனம் - மதம் கடந்து சகோதரத்துவத்துடன் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி, நாட்டை ஒன்றாய் முன்னோக்கி கொண்டு செல்ல உறுதி பூணுவோம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.