நெற்செய்கையில் பரவும் Nematoda அபாயகரமானது: விவசாய அமைச்சு எச்சரிக்கை

by Bella Dalima 14-01-2023 | 8:40 PM

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் நெற்செய்கையில் பரவியுள்ள Nematoda (nematodes) நோய் காவி மிகவும் அபாயகரமானது என விவசாய அமைச்சு எச்சரித்துள்ளது.

இது வேறு செய்கைகளிலும் பரவும் அபாயம் உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

உரிய நடைமுறையை பின்பற்றி தரமான சேதனப் பசளை பயன்படுத்தப்படாமையே  Nematoda பரவக் காரணம் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு பெரும்போகத்தின் போது அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட அரசாங்கம் இரசாயன உரத்திற்கு தடை விதித்து சேதனப் பசளையை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்தது.

குறித்த காலப் பகுதியில் பல நிறுவனங்கள் சேதனப் பசளையை தயாரித்துள்ளதுடன், அவை உரிய தரத்தை பின்பற்றி தயாரிக்கப்பட்டனவா என்பதில் சந்தேகம் உள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விவசாய திணைக்களம் பரிசோதனைக்கு உட்படுத்திய Compost மாதிரிகளில் Nematoda அதிகளவில் இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை நடத்துவதாகவும் விவசாயிகளை தௌிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் விவசாய அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சரிடம் கூறியுள்ளார்.