.webp)

Colombo (News 1st) கொழும்பு புறக்கோட்டைக்கு பொறுப்பாக கடமையாற்றும் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களை உடனடியாக விவசாய பிரதேசங்களில் பணிபுரிய நியமிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
2023 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் கால்நடை துறையின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
எவ்வித செய்கையும் இடம்பெறாத கொழும்பு புறக்கோட்டையில் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டது ஏன் என அமைச்சர் மஹிந்த அமரவீர, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரச துறைகளில் பணியாற்றும் சில அதிகாரிகளின் திறமையின்மை, சில அதிகாரிகள் பொதுமக்களுக்கு முறையாக சேவைகளை வழங்க தேவையான பதவிகளில் இல்லாமை காரணமாக நாடும் நாட்டு மக்களும் அரசாங்கமும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இதுபோன்ற தேவையற்ற பணியிடங்களுக்கு அதிகாரிகளை நியமிக்காமல், விவசாயம் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு அவர்களை நியமிக்குமாறு விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார்.
