ஹஜ் யாத்திரிகர்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்

ஹஜ் யாத்திரிகர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்: சவுதி அறிவிப்பு

by Bella Dalima 10-01-2023 | 4:21 PM

Saudi Arabia: கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்புகளால் அனைத்து நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை விதித்தன. 

சவுதி அரேபியாவும் ஹஜ் யாத்திரிகர்களின் வருகைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. 

கொரோனா பாதிப்பு ஓரளவிற்கு கட்டுக்குள் வந்த பிறகு ஹஜ் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. 

ஆனாலும் வெளிநாடுகளில் இருந்து குறைந்த அளவிலேயே ஹஜ் யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா காலங்களில் ஹஜ் யாத்திரிகர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி, இந்த ஆண்டு ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கையில் வரம்புகளை சவுதி அரேபியா அரசு விதிக்காது. கொரோனா தொற்று காலத்திற்கு முன்பு இருந்த நிலை மீண்டும் கொண்டு வரப்படுகிறது. 

வயது வரம்பின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா காலங்களில் ஹஜ் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், சவுதி அரேபியா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.