.webp)
இலங்கைக்கு எதிரான முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 67 ஓட்டங்களால் ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
எனினும், அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக தனி ஒருவராகப் போராடி சதமடித்தார்.
குவாத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான அணித்தலைவர் ரோஹித் சர்மா 83(67) ஓட்டங்களையும், சுப்மன் கில் 70(60) ஓட்டங்களையும் பெற்றனர்.
இவர்கள் முதல் விக்கெட்டுக்காக 19.4 ஓவர்களில் 143 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய விராத் கொஹ்லி 87 பந்துகளில் ஒரு சிக்ஸர், 12 பௌண்டரிகளுடன் 113
ஓட்டங்களைப் பெற்றார்.
இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 373 ஓட்டங்களைக் குவித்தது.
பந்துவீச்சில் கசுன் ராஜித 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடின இலக்கான 374 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது.
அவிஸ்க பெர்னாண்டோ 5 ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸ் ஓட்டமின்றியும் ஆட்டமிழந்தனர்.
சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய பெதும் நிசங்க 72(80) ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 47(40) ஓட்டங்களையும் பெற்றனர்.
அதன் பின்பு களமிறங்கிய வீரர்கள் பிரகாசிக்க தவறினாலும் தனி ஒருவராகப் போராடிய அணித்தலைவர் தசுன் ஷானக அபாரமாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைக் குவித்தார்.
கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் பௌண்டரி மூலம் சதத்தை எட்டிய அவர் இறுதிப் பந்தில் சிக்ஸர் விளாசினார்.
88 பந்துகளை எதிர்கொண்ட தசுன் ஷானக 3 சிக்ஸர்கள், 12 பெளண்டரிகளுடன் 108 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.
சர்வதேச ஒருநாள் அரங்கில் இது அவரது இரண்டாவது சதம் என்பதுடன் இந்தியாவுக்கு எதிராக அவர் பெற்ற முதல் சதமாகும்.
கடந்த வருடம் ஜனவரி 18 ஆம் திகதி பல்லேகெலே மைதானத்தில் சிம்பாப்வேவுக்கு எதிராக நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தசுன் ஷானக தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தமை குறிப்பிடத்தக்கது.
தசுன் ஷானக சதமடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய கசுன் ராஜித 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
இலங்கை அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
உம்ரான் மலிக் 3 விக்கெட்டுகளையும், மொஹட் ஷிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.